அரசு வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும் : மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களுக்கு அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம்

அரசு வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.

எரிபொருளுக்கான செலவு என்பது தனி நபரை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கவலை கொள்ளச் செய்தது.

இதனடிப்படையில் 2015ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 197நாடுகள் எதிர்காலத்தில் எரிபொருளுக்கு மாற்றான மின் வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்தன.

அதன்படி 2030க்குள் நூறு சதவீத மின்சார வாகனங்களுக்கு மாறுதல் எனும் இலக்கு அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீக்கு ஒரு மின்னூட்டு நிலையம் அமைக்கவும் திட்டம் உள்ளது.

இந்தியாவில் இதற்கான முயற்சிகள் முன்பே தொடங்கிவிட்டன என்றாலும், 2019 -ம் ஆண்டில் இருந்து வேகமெடுக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஸ்கூட்டர் ரக இரு சக்கர வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கார்களும் விற்பனையாகி வருகின்றன.இந்தநிலையில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்றக்கோரி மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘‘இத்தகைய நடவடிக்கை பொது மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். அதோடு மக்கள் மின்வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ள ‘மின் எரிபொருளுக்கு’ மாறும் பிரச்சாரத்த்தின் பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.