அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம்  ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று  வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,

தமிழகம் அறிவார்ந்த சமுதாயமாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள்.

நானும் உங்களை போலவே அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது அமைச்சராகியுள்ளேன். என்னைப் போன்றே அனைத்து மாணவ, மாணவிகளும் உயர் நிலையை அடைய வேண்டும். மேலும் மாணவ, மாணவிகளாகிய நீங்கள் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட அனைத்து கல்வித் திட்டங்களை நன்கு அறிந்துகொண்டு, அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம்  ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள மறமடக்கி மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்பனைக்காடு மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடகாடு மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும், 644 மாணவர்களுக்கு தலா ரூ.4,992 வீதம் ரூ.32,14,848 மதிப்பிலும் மற்றும் 535 மாணவிகளுக்கு தலா ரூ.5,175 வீதம் ரூ.27,68,625 மதிப்பிலும் என ஆகமொத்தம் 1,179 மாணவ, மாணவிகளுக்கு ரூ.59,83,473 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் இன்றையதினம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் மாணவ, மாணவிகள் நாள்தோறும் மிதிவண்டிகளில் பள்ளிக்கு சென்று வருவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாகவும் அமைகிறது என  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, கீரமங்கலம் பேரூராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.69.40 இலட்சம் மதிப்பீட்டில் தலுகை ஊரணி தூர்வாரும் பணியும், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் புதுக்கோட்டை , சு.சொர்ணராஜ் அறந்தாங்கி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), வள்ளியம்மை தங்கமணி திருவரங்குளம், கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் ரவி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − 89 =