அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை ரோட்டரி சங்கம் வழங்கியது

திருமயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அதற்குண்டான கருவிகளை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று வழங்கப்பட்டது.

ஏசிடி கிராண்ட்ஸ், ஸ்வஸ்த் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூபாய் 60,000 மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அதற்குண்டான கருவிகளை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் வெங்கடாசலம், ஓவியர் ரவி, சொக்கலிங்கம், டாக்டர். ராஜசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ரோட்டரியின் முன்னாள் பொதுச் செயலாளர் கான் அப்துல் கஃபார் கான் சிறப்பு விருந்தினராகவும், ரோட்டரி மாவட்ட அறக்கட்டளை இயக்குனர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், ரோட்டரி துணை ஆளுனர் சிவாஜி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அதற்குண்டான கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினார்கள். இதனை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். கருப்பசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிறைவில் சங்கத்தின் பொருளாளர் கதிரேசன் நன்றி கூறினார்.