தமிழ்நாட்டில் கூடுதலாக மாணவர் சேர்க்கப்பட்ட பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட மைய நூலகம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு கேடயம் மற்றும் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, பேசினார்.
இதனையடுத்து, அவர் செய்தியர்களிடம் கூறியதாவது: மதுரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் நினைவு நூலகம் போல், திருச்சியிலும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 37,579 அரசு பள்ளிகள் உள்ளன. தற்போது அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளன. சில இடங்களில் 150 பேர் மட்டும் படித்து வந்த இடங்களில் 350 பேர் வரை சேர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும், கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்ற இடங்களில் தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், பள்ளி கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இதுகுறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னரே புதிதாக ஆசிரியர்கள் நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.