அரசு ஒப்பந்தங்களை தனது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அளித்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு கோவையில் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தும் வகையில் அரசு ஒப்பந்தங்களை தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை இன்று காலை 6 மணி முதல் நடைபெற்று வருகின்றது.

எஸ்.பி. வேலுமணி, 9 நிறுவனங்கள், 8 பேர் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 15 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது கோவை மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்த வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மதுக்கரையில் உள்ள வேலுமணியின் மைத்துனர், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது அத்துடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்கு பதிந்துள்ளனர்.வேலுமணி சகோதரர் பி.அன்பரசன் ,ஏ சந்திரசேகர், ஆர்.சந்திரசேகர், ஆர் முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ace tech machinery, constronics infra, constromall உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அமைச்சர் வேலுமணி வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகின்றது.