
தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை 1974 ஜன.1ல், அரசு செயல்படுத்தியது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களின் மாதாந்திர பிடித்தம் ரூ.60ல் இருந்து ரூ.110 ஆக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சட்டசபையில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசுகையில், விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் கட்டப்படும். மேலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதே திராவிட கொள்கை. போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தகுதிகேற்ப அரசு பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் 394 ஏக்கர் பரப்பளவில் திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் புதிதாக 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன்மூலம் சுமார் 7,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். சிட்கோ மூலம் செங்கல்பட்டில் 19 ஏக்கரில் ரூ.23 கோடியில் சிற்பகலைஞர் தொழிற்பூங்கா அமைக்கப்படும். நீலகிரியில் 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் ரூ.50.06 கோடியில் நவீனமயமாக்கப்படும். நீட்ஸ் திட்டத்தில் தொழில் முனைவோர் மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தனி நபர் முதலீடு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.