அரியலூரில், நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிக்குரு கொலாப் நிறுவனம் சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா, கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கிரிஜா ஆகியோர் நகரும் விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சியில் கடந்த ஜூலை மாதம் கலந்துகொண்டனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து செயல்படும் டி.ஏ.எப்.இ மற்றும் ஹவாய்ல் உள்ள பென்சீர் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பணி, ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்களை இரவு நேரங்களில் படமெடுத்து அதை அறிவியல் ஆர்வலர்களுக்கு அனுப்புவதுதான். இதனைப் பெறும் அறிவியலாளர்கள், விண்கற்களை இனம் கண்டு அதன் ஆய்வறிக்கையை சிக்குரு கொலாப் நிறுவனத்தில் சமர்ப்பிப்பார்.
அதன்படி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிரியைகள் அவர்கள் ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து தங்கள் அறிக்கையை சமர்பித்தனர். இதை சிக்குரு கொலாப் நிறுவனம் மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுக்காக அனுப்பியது. இதில் 18 விண்கற்களை முதல்கட்ட ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டது.
விஞ்ஞானிகளால் இவை விண்கற்கள் தான் என உறுதி செய்யப்பட்டால் அவற்றிற்கு அதை கண்டுபிடித்த ஆசிரியர்களே பெயர் சூட்டிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அறிவியலாளர் என்ற சான்றிதழும் இந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரியலூர் மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை கவிதா மற்றும் கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அவை விண்கற்கள் தான் என கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு அவர்களே பெயர் சூட்டும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். அதற்கான சான்றிதழையும் பெற்று சாதித்துள்ளனர்.
வரும் காலங்களில் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் கண்டுபிடித்து, அதற்கென தனி குழு அமைத்து பயிற்சியின் மூலம் அவர்களை விஞ்ஞானியாக உருவாக்க முடிவு செய்திருப்பதாக சாதனை ஆசிரியைகள் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்த இரண்டு ஆசிரியைகளையும் பள்ளிக்கல்வித்துறை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.