அரசுப் பள்ளியில் இரண்டு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி; மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சம்

திருத்துறைபூண்டியில் ஒரே பள்ளியில் தொடர்ந்து இரண்டாவது மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி வட்டத்திற்குட்பட்ட தலைக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் ஒன்பது மற்றும் பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரே பள்ளியில் தொடர்ந்து இரண்டாவது மாணவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.