அரசுப்பள்ளி தொடர்ந்து 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி : ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் விருது

தொடர்ந்து 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற மதியநல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊர்ப்பொதுமக்கள், சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  மதிய நல்லூரில்  2012 ஆம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று இப்பகுதி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

தொடர்ந்து 10 ஆண்டுகாலமாக நூறு சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சாதனையாளர் விருது வழங்கும் விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வி.ராமசாமி  தலைமை வகித்து பள்ளிக்கு கேடயம் வழங்கினார். அதை பள்ளியின் தலைமை ஆசிரியர்  தர்ம சேகர் பெற்றுக்கொண்டார் .

பள்ளியின்  உதவித் தலைமையாசிரியர் பாலச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள் குமார், அருள், மர்பி, ராமமூர்த்தி, பிரதிபா பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் மதியநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 + = 50