அரசுப்பள்ளிகளில் இருந்து மருத்துவம் பயிலச்செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்ட “தமிழினி துணைவன்” ரெடி!

அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவம் பயில செல்லும் மாணவர்களுக்கு 2ம் ஆண்டாக வழிகாட்ட “தமிழினி துணைவன்” தயார் என்று அதன் நிறுவனர் தெரிவித்தார்.

இதுகுறித்து “தமிழினி துணைவன்” நிறுவனரும் அரசு மருத்துவருமான டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி தெரிவித்ததாவது:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள தமிழினி புலனம் குழுவை சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் ஒன்றிணைந்து தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து 7.5 இட ஒதுக்கீட்டில் தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்வியை சிரமமின்றி அவர்கள் படிப்பதற்கு கட்டணம் இல்லாமல் “தமிழினி துணைவன்” என்ற வாட்ஸ்அப் குழு மருத்துவர் வீ.சி.சுபாஷ் காந்தியால் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாணவ மாணவிகளுக்கு திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அவர்களுக்கு முதலாமாண்டு மருத்துவ பாடத்தின் கருப்பொருளை பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள் கொண்டு தொடர்ந்து வகுப்புகள் நடத்தி வருகிறோம். இதுவரை முதலாம் ஆண்டு மருத்துவ பாடங்களான உடற்கூறு இயல், உடலியங்கியல் மற்றும் உயிர் வேதியியல் உள்ளிட்டவை இணைய வழியில் 107 வகுப்புகள் தமிழில் விளக்கிக் கூறி தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாரம் ஒரு பிரபல மருத்துவ நிபுணர் கலந்து கொள்ளும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வகுப்பு, மாதம் ஒருமுறை மனநல ஆலோசனை வகுப்பு என மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து  நடத்தி வருகிறோம்.

மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிமையாக்கும் விதமாகவும் முக்கியமான வினாக்களுக்கான விடைகளை மாணவர்களுக்கு எழுதிக்காட்டியும் படம் வரைந்து விளக்கிக் கூறியும் மருத்துவ பேராசிரியர்கள் சரயு, மகேஸ்வரி, நிர்மலா, திருமாறன், நவீன் பிரபாகரன், அஷ்ரப் அலி, தமயந்தி, சௌந்தர்யா, மேரி அருள் பிரியா, வினுபிரதா, ராஜ் கோகிலா ஆகியோர் எளிமையாக்கி வருகின்றார்கள்.

இந்தாண்டு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 2022 -2023ம் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் 491 மாணவ, மாணவிகளுக்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனி கிழமைகளில் மாலை 6 முதல் 7 மணி வரை வகுப்புகள் நடைபெற உள்ளது. எதிர்வரும் நவ.,17ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு எவ்விதமான கட்டணமும் இல்லை. தமிழினி துணைவன் குழுவில் இணைய டாக்டர்.வீ.சி.சுபாஷ் காந்தி 98949 80802 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான திட்டமிடல் பணிகளை பேராசிரியர் திருவேங்கடம் மற்றும் செவிலிய பேராசிரியர் உமா ஒருங்கிணைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 13