அயல்நாடுகளில் பணிக்கு சென்று இறக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2023 விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:- அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில் உதவி புரிந்து வரும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் “அயலகத் தமிழர் நாள்” கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது வெறும் அறிவிப்பல்ல என்பதைத்தான் இங்கே திரண்டிருக்கின்ற நீங்களும் உங்களோடு கலந்து நானும் சேர்ந்து இங்கே நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்திட முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டோடு தமிழ் பரப்புரை கழகத்தைத் தொடங்கி வைத்தேன். தமிழர்களின் நலன் பேணவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புலம்பெயர் தமிழர் நலவாரியம் உருவாக்கப்பட்டு கார்த்திகேய சிவசேனாபதி அதன் தலைவராகவும், வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் அரசுசாரா உறுப்பினர்களாகவும், அரசு உயர் அலுவலர்களை உள்ளடக்கியதாகவும் இந்த வாரியம் செயல்பட உள்ளது.

ஆம். சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலான அரசு இது. அயலகத்தில் வாழும் தமிழர் நலன் காக்கும் வகையில் தொடங்கப்பட்ட இத்துறையில், கடந்த ஓராண்டில் மட்டும், வெளிநாடுகளில் இறந்து போன 288 தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருதல், அங்கே இறந்தவர்களின் ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருதல், மருத்துவ இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல், இதுபோன்ற வேலைகளை அங்குள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது. அயலகத் தமிழர்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்து, அயல்நாட்டிற்கு செல்லும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை என பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே நம் அரசு, வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், வெளிநாடுகளிலிருந்து 80 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் பணி வாய்ப்பை இழந்த காரணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூண்ட போது, இந்திய ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடனும், உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடனும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு அரசின் சார்பிலே உடனடியாக அவர்களுக்குத் தேவையான 174 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பால்பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்து, மனிதநேய அடிப்படையில் அங்குள்ள மக்களின் இன்னலைப் போக்கிட உதவிக்கரம் நீட்டியது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போதெல்லாம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கவனத்தில்கொண்டு, தாயுள்ளத்தோடு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, அயலகத் தமிழர் நாளான இன்று சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு நான் அறிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும். 2-வதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.

3-வதாக அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிடுவதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன். தமிழ்நாட்டி னுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கக்கூடிய நான், உங்களில் ஒருவனாக, உங்களுடைய ஒரு சகோதரனாக, உங்களில் பலருக்கு அண்ணனாக, சிலருக்கு தம்பியாக, ஏன், அனைவருக்கும் உடன்பிறப்பாக நான் இருக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களால் ஆன ஒத்துழைப்பினை நீங்கள் வழங்குங்கள், இணைந்து நாம் பயணிப்போம். நம்மைக் கடலும் கண்டங்களும் பிரித்திருந்தாலும், தமிழ் இணைக்கும். உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு தழைக்கும். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

63 − 57 =