அமெரிக்கா தான் இஸ்ரேல் போரை தூண்டிவிடுகிறது – புதின் பரபரப்பு குற்றச்சாட்டு

போரை நிறுத்தாமல் மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தக் காரணம் என்ன. அமெரிக்கா யாரை அச்சுறுத்த நினைக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். 5000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனா்.

இதன் பின்னர் இஸ்ரேல், போர்ப் பிரகடனம் அறிவித்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் காசா பகுதியில் மின்சாரத்தை துண்டித்து இருளில் மூழ்கடித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடனம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. காசா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 7-வது நாளாக தொடா்ந்து வருகிறது.

ஹமாஸை எதிர்த்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து முற்றுகை மற்றும் வான்வழித் தாக்குதலை நிகழ்த்தி வருவதால் காசா பகுதியில் நிலைமை படுமோசமாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுப் பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

காசாவில் உள்ள சுமார் 10 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் என்கிளேவின் தெற்கே இடம் பெயர வேண்டும் என்று இஸ்ரேலிய ராணுவம் கெடு விதித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும் இந்த போரின் மூலம் பேரழிவு தரும் மனிதாபிமானமற்ற விளைவுகள் குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

இதேபோல லெபனானின் எல்லை மற்றும் காசா பகுதியில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் ரக வெடிமருந்துகளை பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் பல வீடியோக்களை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் தொடர்பான தற்போதை போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தோல்வியைச் சந்தித்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற மின்சக்தி தொடர்பான மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது, இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. மாறாக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பலை நிறுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று எனக்கு புரியவில்லை. இதன் மூலம் அமெரிக்கா லெபனான் மீது தாக்குதல் நடத்த விரும்புகிறதா அல்லது அந்த பகுதி மக்களை அச்சுறுத்த அமெரிக்கா விரும்புகிறதா எதற்கு அச்சப்படாத மக்கள் தான் அங்கு வசிக்கிறார்கள்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் இதுவல்ல. பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் சமாதான ஒப்பந்தத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டுமே தவிர இது போன்ற அச்சுறுத்தும் வேலையை கைவிட வேண்டும் என புதின் தெரிவித்துள்ளார்.