அமராவதி ஆற்றை தூர் வாரி சீர் செய்ய வேண்டும் என்று விவசாய முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
விவசாய முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், தலைமை நிலையச் செயலாளர் மாதேஸ்வரன், விவசாய முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் மற்றும் திருப்பூர்,கரூர் மாவட்ட விவசாயிகளும் அமராவதி ஆற்றில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தற்போது அமராவதி ஆறானது திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்பொழுது, ஆற்றின் பல இடங்களில் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களாலும், புல் புதர்களும் மண்டி கிடப்பதாலும் நீரின் வரத்து பல இடங்களில் தடைபட்டு சீரான நீர் ஓட்டம் இல்லாமல் தேக்கம் ஏற்பட்டு நீர் வரத்து தாமதமாகிறது.
எனவே அமராவதி ஆற்றின் கரை மற்றும் உள்பகுதியில் உள்ள புல் புதர்களையும், சீமை கருவேல முட்களையும் அகற்றித் தருமாறும், அதேபோல கிளை வாய்க்கால்கள் பல இடங்களில் தூர் வாரப்படாமல் உள்ளதால், அதனை விரைந்து தூர் வாரும் பணியை முடித்திட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் , நீர்வளத்துறை அமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்க விவசாய முன்னேற்றக் கழகத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.