அனைவரும் தியாகம் செய்ய வேண்டும் – துணை முதல்வர் பதவி கோரிய கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரேமேஸ்வரா கருத்து 

“அனைவரும் ஒரு கட்டத்தில் தியாகம் செய்ய வேண்டும். அனைத்தும் சிறப்பாகவே நடத்திருக்கிறது” என்று கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரமேஸ்வரா இன்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிஸ் கட்சி ஐந்து நாள் இழுபறிக்கு பின்னர் வியாழக்கிழமை மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், ஒரே துணைமுதல்வராக டிகே சிவகுமாரையும் அறிவித்தது. மேலும் 2024 மக்களவைத் தேர்தல் முடியும் வரை மாநில காங்கிரஸின் தலைவராக அவரே தொடர்வார் எனவும் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு தலைவர்களும் பெங்களூருவில் வியாழக்கிழமை இரவு நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகா விரைந்தனர். இந்தநிலையில் அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய எம்எல்ஏக்கள் குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் வெள்ளிக்கிழமை மீண்டும் டெல்லி செல்ல இருக்கிறார்கள். இந்த பரபரப்பான சூழலில் தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும். இல்லையென்றால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முதல்வர் பதவி போட்டியில் இருந்த தலித் எம்எல்ஏவுமான ஜி.பரமேஸ்வரா வியாழக்கிழமை போர்க்கொடி தூக்கினார்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை அவர், “அனைவரும் ஒருகட்டத்தில் தியாகம் செய்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பரமேஸ்வரா,”அனைத்து விஷயங்களும் சுமுகமாக நிறைவடைந்து, சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. கண்டிப்பாக அவர்கள் இருவரும் அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்வார்கள். அதன் மூலம் எங்களின் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.

தொடர்ந்து தலித், லிங்காயத்துகளுக்கு துணை முதல்வர் பதவி என்ற கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “என்னுடையது தனிப்பட்ட கோரிக்கை இல்லை. ஆனாலும் கட்சியுடன் ஒப்பிடும் போது எனது கோரிக்கை முக்கியமானதும் இல்லை. கட்சியே பிரதானமானது. இப்படியான கோரிக்கைகள் எப்போதும் இருக்கும். சிலர் சில விஷயங்களை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவை அனைத்தையும் நிறைவேற்றிட முடியாது. அதனால் தான் நான், அனைவரும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றேன். மக்களின் எல்லா விருப்பங்களையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிவிட முடியாது. நீண்ட பயணத்தில் அனைத்து விஷயங்களும் சரி செய்யப்பட்டு, அனைவரும் கவனிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

இது எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படும் நேரம். இது நாம் அனைவரின் தனிப்பட்ட விருப்பங்களை மறந்துவிடும் நேரம். இந்த நேரத்தில் நாம் அனைரும் ஒன்றிணைந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நாம் முன்னோக்கி போக வேண்டும். 2024ல் மக்களவைத் தேர்தலும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் நான் ஏற்கனவே சொன்னதுபோல கட்சியே பிரதானம்.” இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, வியாழக்கிழமை ஜி.பரமேஸ்வரா, “தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்றால், எதிர்மறை விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். அது கட்சிக்கு பாதிப்பை உண்டாக்கும்” என்று தெரிவித்திருந்தார். 71 வயதாகும் இந்த தலித் தலைவர், காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியில், குமாரசாமி முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக பணியாற்றியுள்ளார். அதேபோல் மாநில காங்கிரஸ் தலைவராக 8 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். இந்த முறை முதல்வர் பதிவக்கான போட்டியில் அவரின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடந்தது. அதன் வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக 66 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.