
அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் அத்தனை பெண் பிள்ளைகளையும் எனது பிள்ளைகளாக நினைத்து அதிக அக்கறை செலுத்தி வருகிறேன். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி பேச்சு.
திருச்சி காட்டூர் மான்ஃபோர்டு சி.பி.எஸ்.இ பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம்- 3000, கல்வியாளர்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை, ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாணவியரைக் கொண்டாடும் மகத்தான மேடை தனித்திரு அறிவால், ஆற்றலால் என்னும் நிகழ்ச்சி இன்று 14-10-2023. (சனிக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்டம்- 3000 மாவட்ட ஆளுநர் ஆர்.ஆனந்தஜோதி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மு.சிவகுமார்,திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் எம். பிரதிபா, மான்ஃபோர்டு சி.பி.எஸ்.இ பள்ளியின் முதல்வரும், தாளாளருமான ஏ.இராபர்ட்லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திருச்சி பட்டர்பிளேஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் சுபாபிரபு வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் தொடக்க உரை ஆற்றினார். இந்நிகழ்வில் ரோட்டரி 3000 ரைலாவின் சேர்மன் அ.அபுதாலிப், மகப்பேறு மருத்துவர் பத்மபிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி கலந்துகொண்டு மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இணைய வழியில் வகுப்புகள் எடுக்கும் தமிழ் உறவுகள் வழிகாட்டி மருத்துவக்குழுவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களுக்கும், ரோட்டரி 3000ன் மூலம் பள்ளி மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டல் வகுப்புகளை சிறப்பாக நடத்திக்கொடுத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டியும், திருவரம்பூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தும், தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பழ.பிரகதீஸ் எழுதிய கற்றல் நன்றே, கற்றல் நன்றே என்னும் நூலையும், தஞ்சாவூர் மாவட்டம், சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை தி.சுமதி எழுதிய விருத்தப்பூக்கள், மணக்கும் மரபு மாலை ஆகிய நூல்களையும் வெளியிட்டு பேசும்போது கூறியதாவது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி எனது தொகுதியில் இந்த நிகழ்ச்சியினை நீங்கள் இணைந்து நடத்துவது மிகவும் சிறப்பானதாகும். சிகரம் சதிஷ்குமார் சொன்னதை போல ஆண் பிள்ளைகள் 2 பேரை பெற்றுள்ள எனக்கு பெண் பிள்ளைகள் இல்லாத நிலையில் அனைத்துப்பள்ளிகளிலும் படிக்கும் அத்தனை பெண்குழந்தைகளையும் எனது பிள்ளைகளாக நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு அவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகிறேன். பாலினப்பாகுபாடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தந்தை பெரியாரில் தொடங்கி பேரறிஞர் அண்ணா, கலைஞர், தளபதி ஸ்டாலின் ஆகியோர் பெண்களுக்காக பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த முறையில் அரசு பள்ளிகளில் 6- ம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகள் படிப்பை இடையில் நிறுத்தக்கூடாது என்ற காரணத்திற்காக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அவர்கள் உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம்,மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் உள்ளிட்ட பல சிறப்பான திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கி வருவதன் காரணமாக உயர் கல்வி தொடர முடியாத 15 ஆயிரம் மாணவிகள் உயர் கல்வியை தொடர்ந்திருக்கிறார்கள். குழந்தைகள் சத்தான உணவு சாப்பிடவேண்டும். சத்தாக இருக்கவேண்டும். நன்றாக விளையாட வேண்டும். அதனைத்தொடர்ந்து நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காக காலை உணவுத்திட்டம்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவாலும், ஆற்றலாலும் நீங்கள் தனித்திருந்து சாதனைப்படைக்கும்போது சமூகத்தில் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சரும் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ளார்கள். தொடர்ந்து வெற்றி பெறுபவர்களை விட தோல்வியடைந்து பின்னர் வெற்றி பெறுபவர்கள் எதையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாகிறார்கள்.அதேபோல நீங்களும் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி இலக்கை அடையலாம். நீங்கள் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் வாயிலாக பெற்ற கருத்துகளை மற்றவர்களிடமும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
2035ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் உயர்கல்வி இலக்கு 50சதவீதமாகும். ஆனால் பெண் கல்விக்காக பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக தற்போதே தமிழகம் உயர்கல்வியில் 51.4 சதவீத இலக்கை எட்டியுள்ளது. தைவான் நாட்டில் உயர்கல்வி படிக்கும் 3 மாணவிகளில் 2 மாணவிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதில் இருந்து தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பெருமையினை நீங்கள் புரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற 247 மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள் என்பதை பார்க்கும்போது அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை தொடர்ந்து நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியினை திருச்சி பட்டர்பிளேஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் சுபாபிரபு ஒருங்கிணைப்பு செய்தார். நிறைவாக திருச்சி பட்டர்பிளேஸ் ரோட்டரி கிளப்பின் செயலாளர் பராசக்தி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 10 பள்ளிகளில் இருந்து 1000 மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.