
ஊழல் புகார் காரணமாக அமலாக்கத்துறை பிடியில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிக்கி தவித்து வருவதால் தற்போதைய தமிழக அமைச்சரவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 2011-15ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அப்போது 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டிற்கு ஆளானார். இவ்வழக்கு பைசல் செய்யப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜி மீதான ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.ஆக.,11ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடர் காரணமாக பங்கேற்க இயலாது என வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார். செப்.,13க்கு பின் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளது.
இதற்கிடையே மற்றொரு தி.மு.க., அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மதுரை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர் 2006ல் அ.தி.மு.க., ஆட்சியில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார்.இருப்பினும் லஞ்சஒழிப்பு போலீசார் சேகரித்த ஆவணங்கள் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவரும் சட்டசபை கூட்டத்தொடரை காரணம் காட்டி பங்கேற்க இயலவில்லை என தெரிவித்துள்ளார். இதுபோன்று தி.மு.க., அமைச்சர்கள் சிலரது வழக்குகளை அமலாக்கத்துறை துாசி தட்ட ஆரம்பித்துள்ளது.