அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – மதுரை ஐகோர்ட் கேள்வி

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலையை சேர்ந்த ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகி, தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் கூறினர்.

இதனைத்தொடர்ந்து இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மொத்தமாக 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும், அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள், 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை, 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை, 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை, 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து, அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அனைத்து மொழிகளும் நிகரானவை. ஆனால் ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டியவை. மொழிகளுக்கிடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க இயலாது. தமிழ் கல்வெட்டுக்களை கண்டறிந்து, தமிழை பெருமை படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. தொல்லியல்துறையில் திறமையானவர்களை நியமித்து, அனைத்து பணியிடங்களையும் நிரப்பினாலேயே பணிகள் சிறப்பாக நடைபெறும். மொழி வாரியாக கல்வெட்டுக்களின் எண்ணிக்கை, நிபுணர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்களின் விபரங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.