அட்டாரி-வாகா எல்லையில் 418 அடி உயரத்தில் இந்திய தேசியக் கொடி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் 418 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக உயரமான தேசியக் கொடியை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது: தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தால் (என்எச்ஏஐ) அட்டாரி-வாகா எல்லையில் 418 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட நாட்டின் மிக உயரமான இந்த தேசியக் கொடியை ஏற்றிவைத்த நாள் எனது வாழ்வின் மிகவும் பொன்னான நாள். இந்த இடம் உங்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டுவதுடன் தேசப்பற்றை உருவாக்கும் இடமாகவும் அமைய வேண்டும்.

நான் எனது வாழ்நாளில் சுரங்கப்பாதைகள், பாலங்கள் என ஏகப்பட்ட விஷயங்களை செய்திருக்கிறேன். ஆனாலும், இதைத்தான் மிக அற்புதமானதாக கருதுகிறேன். இதற்காக எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறேன். நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, இந்திய ராணுவத்தின் பூஞ்ச் படைப்பிரிவு செப்டம்பர் 21-ல் அஜோட் போர் நினைவிடத்தில் 72 அடி உயர தேசிய கொடியை ஏற்றி வைத்தது. போரில் வீரமரணம் அடைந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த தேசிய கொடி நிறுவப்பட்டது.