ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ம.க., அறிவித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்ததாவது: தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாத ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, கட்சி தலைமை நிர்வாகிகள், ஒன்பது மாவட்ட துணை பொதுச்செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தை நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடத்தினர்.கூட்டத்தில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்றும், நாளையும் மனுக்கள் பெறப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.