அசோக சக்கரம், இஸ்ரோ சின்னம் நிலவில் இந்தியாவின் அடையாளத்தை நிறுவப் போகும் சந்திரயான்-3

நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் -3 விண்கலம் அங்கு நிலவின் மேல்பரப்பில் இந்தியாவின் அடையாளத்தைப் பதிக்கவுள்ளது. விண்கலத்தின் ரோவர் பிரக்யானின் பின்பக்க கால்களில் தேசிய சின்னமான அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோவின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அவை நிலவில் இந்தியாவின் தடத்தை பதிக்கும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று (ஜூலை 15) மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அது நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் நிலவை சுற்றி வந்து 312 நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்தது. சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால், திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. இந்நிலையில், நிலவுக்கு சந்திரயான் -3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அது அங்கு நிலவின் மேல்பரப்பில் இந்தியாவின் அடையாளத்தைப் பதிக்கவுள்ளது.