அங்கக முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய இணையவழி பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் அங்கக முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இணைய வழி விவசாயிகள் பயிற்சி கீழப்பனையூர் ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியை அரிமளம் வட்டாரம், வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளரும் வேளாண்மை உதவி இயக்குநருமான கா.காளிமுத்து துவக்கி வைத்து அறிமுக உரை நிகழ்த்தினார். வேளாண்மை அலுவலர் வீரமணி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் கயல்விழி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஈவெரா அங்கக முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி செய்வதின் தேவைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், பாரம்பரிய நெல் இரகங்களின் வகைகள், சாகுபடி செய்வதற்கு ஏற்ற பட்டங்கள், பாரம்பரிய நெல் இரகங்களின் தன்மைகள் குறித்தும், சூழ்நிலைக்கேற்ப காற்றை எதிர்த்து நிற்க கூடிய இரகங்கள், வெள்ளம் மற்றும் வறட்சிக்கு தாக்கு பிடிக்கும் இரகங்கள், களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்ற இரகங்கள் குறித்தும், சாகுபடிக்கு ஏற்ற மண் வகை, பயிரின் வயது, பயிரின் தன்மை, மகசூல் குறித்தும் விரிவாக பயிற்சி அளித்தார்.

மேலும் பாரம்பரிய நெல் இரகங்களை அங்கக முறையில் சாகுபடி செய்வதற்கான நாற்றங்கால் மேலாண்மை, உயிர் உரங்கள் மற்றும் விதை மூலமாக பரவக்கூடிய நோய்களை தவிர்க்க பீஜாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்யும் முறைகள் பற்றியும், அங்கக முறையில் நாற்றங்காலில் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்தும், பசுந்தாள் மற்றும் பசுந்தழை பயிர்கள் மடக்கி உழுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நடவு வயல் தயார் செய்வது பற்றியும், நடவிற்கு பின் பின்பற்றக்கூடிய முக்கிய தொழில்நுட்பங்களான ஜீவாமிர்தம் இடுதல், மீன் அமிலம் உணவு கலவை இடுவது குறித்தும், பஞ்சகாவ்யா, மற்றும் தே மோர் கரைசல் இடுவது குறித்தும், களை மேலாண்மை பற்றியும் விளக்கி கூறினர்.

பாரம்பரிய நெல் இரகங்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை அங்கக முறையில் கட்டுப்படுத்துவது குறித்தும், தாவர பூச்சிக்கொல்லிகள் தயாரித்து இடுவது பற்றியும், அங்கக முறையில் சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகளான மண் வளம் மேலாண்மை, சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை குறித்தும் விரிவாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும் பாரம்பரிய நெல் இரகங்களின் சாகுபடி குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இந்த பயிற்சியில் அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இப்பயிற்சிக்கு பயனாளிகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மா.சௌமியா, சி.ஜெனிபர், மு.சுவேதா, த.பிரதீபா, பு.ஆனஸ்ட் ராஜ் ஆகியோர்கள் அழைத்து வந்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செ.சங்கீதா மற்றும் வி.முருகன் ஆகியோர் செய்து கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் த.லெட்சுமிபிரபா நன்றி கூறினார்.