அக்டோபர்16 முதல் தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

அக்டோபர் 16-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26-வது கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன், உதவி செயற்பொறியாளர் ரம்யா மற்றும் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக பில்லிகுண்டுலிருந்து கர்நாடகா வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, “தமிழகத்துக்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது. இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், 16 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என்று வலியுறுத்துவோம். 8 நாட்களுக்கு தினசரி 3 ஆயிரம் கனஅடி நீர் தர வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 4,666 கன அடிநீர் வழங்கினர். இதன்மூலம் நேற்று வரை 4.21 டிஎம்சி நீர் வந்துள்ளது. இன்னும் நமக்கு 0.454 டிஎம்சி வரவேண்டும்.

மேட்டூர் அணையை பொறுத்தவரை தற்போது 8 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. எனவே, குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் தரப்படும். காவிரி தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு பயந்து கர்நாடகா தண்ணீர் தந்தாலும், அங்குள்ள மக்களுக்காக அவர்களும் நாடகமாட வேண்டியுள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.